பிளாஸ்டிக் பையில் உணவு வழங்க தடை கலெக்டர் உத்தரவு
திருச்சி: சமயபுரம் கோயிலில் தேர்திருவிழாவில் பிளாஸ்டிக் பைகளில் உணவு வழங்க தடை விதித்து கலெக்டர் ஜெயஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தேர்திருவிழாவையொட்டி உணவு விடுதி நடத்துவோர், அன்னதானம் வழங்குவோர் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011ன் படி முறையான அனுமதி பெற்று தரமான உணவு வழங்க வேண்டும். உணவு தயார் செய்ய பாதுகாப்பான குடி நீர், உணவு தயாரிக்கும் இடம் மற்றும் விநியோகம் செய்யும் இடம் சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நிறமூக்கிகள், வாசனை பொருட்கள் சரியான அள வில் பயன்படுத்த வேண்டும்.
அன்னதானம் செய்வோர் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கக்கூடாது. உணவு தயாரிப்போர் மற்றும் பரிமாறுவோர் தன் சுத்தம் பேணுவது அவசியம். தாங்கள் வழங்கும் உணவினால் ஏற்படும் உபாதைகளுக்கு அவர்களே பொறுப்பு. மீறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் படும்.ராட்டினத்துக்கு அனுமதி தேவை
திருவிழாக்களில் ராட்டினம் அமைப்பதற்கு முன்பு அனுமதி பெறவேண்டும். ராட்டினம் உறுதியாகவும், சரியாகவும் இருக்கிறதா என்பதை பொதுப்பணித்துறை சான்று பெற வேண்டும். ராட்டினம் மின்சாரத்தால் இயக்கப்பட்டால் பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய சான்று தேவை எனவும் கலெக்டர் குறிப்பிட்டுள்ளார்.