தினமணி 02.08.2013
பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக்
மற்றும் புகையிலை பொருள்களை ஒழிக்கக் கோரியும், கடைகளில் விற்பனை
செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும், புதன்கிழமை பேரணி நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் ஆர். மகேஸ்வரி பேரணிக்கு தலைமை வகித்தார். இதில்,
பொறியாளர் வி. சுப்பிரமணியன் உள்பட நகராட்சிப் பணியாளர்கள், பாரத ஸ்டேட்
வங்கிக் கிளை மேலாளர் ஜம்புலிங்கம், நகர் நலச்சங்கத் தலைவர் எம்.
அன்புக்கரசன், தொண்டு நிறுவன இயக்குநர்கள் பி. முருகன் (நேசம்), அக்னிவீரா
(மகாகவி), நண்பர்கள் இலக்கிய வட்டச் செயலர் கவிஞர் கவிக்கருப்பையா, வி.நி.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசன், இப்பள்ளி
என்.சி.சி. அலுவலர் மற்றும் மாணவர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட
ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பேரணியானது, நகராட்சி அலுவலகம் முன்பாகத் தொடங்கி, தென்கரை, வடகரை
ஆகிய பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. அப்போது, பிளாஸ்டிக்
மற்றும் புகையிலை பொருள்களினால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும்,
இப்பொருள்களை முற்றிலும் ஒழிக்கும்பொருட்டு இவற்றை பயன்படுத்தக்கூடாது
என்றும், பதாகைகளுடன் பேரணியில் கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
மேலும், கடைகளில் இப்பொருள்களை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என்றும், ஆணையர் ஆர். மகேஸ்வரி எச்சரிக்கை
விடுத்துள்ளார்.