தினமலர் 17.03.2010
புகையில்லா கோவையாக மாற்ற மாநகராட்சி தீவிரம்
கோவை: புகையில்லா நகராக கோவையை மாற்ற மாநகராட்சி நகர்நலத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. புகையில்லா நகராக கோவையை மாற்ற சில மாதங்களுக்கு முன், “மேரி ஆனி சேரிட்டபிள் டிரஸ்ட்‘ என்ற நிறுவனம் சார்பில், பள்ளி தலைமை ஆசிரியர், போலீசார், தீயணைப்புத்துறையினர், ஆசிரியர்கள் மாநகராட்சி கவுன்சிலர்கள் மத்தியில் புகைப்பிடிப் பதை தடுக்க பிரசாரம் செய் யப்பட்டது. பள்ளி வளாகத்திற்கு அருகில், பீடி, சிகரெட் விற்பனை செய்தால் பறிமுதல் செய்யஅதிகாரங்களை வழங்கியது. புகைபிடிக்காமல் இருப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, நகர்நலத்துறை சார்பில் தெருநாடகங்கள், தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கோவை நகரில், “புகையில்லா நகர்‘ என்பதை உணர்த்த, பொதுமக்கள் கூடும் இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கோவை நகரின் முக்கிய இடங்களில் “சைன்போர்டு‘ மாநகராட்சி நகர்நலத்துறையின் சார்பில் வைக்கின்றனர். கோவைக்கு மார்ச் 27 ம் தேதி வரும் “தெற்காசிய காசநோய் மற்றும் நுரையீரல் நோய்க்கான சர்வதேச கூட்டமைப்பினர்‘ கோவை நகரின் முக்கிய பகுதிகளில் பார்வையிடுவர். லாட்ஜ், சினிமா தியேட்டர், பள்ளி, கல்லூரி, மத்திய மாநில அரசு அலுவலகம், தேர்வு செய்யப்பட்ட 15 ரோடுகளில் ஆய்வு செய்வர். இங்கு, சிகரெட், பீடி துண்டுகள் கண்டறியப்பட்டாலோ, பொதுமக்களின் யாரேனும் புகைபிடித்தாலோ, “புகையில்லா கோவை‘ சான்று கிடைக்காது.