தினகரன் 30.08.2010
புதர் மண்டிக்கிடக்கும் மயானம் மாதிரி பூங்காவாக மாற்ற நடவடிக்கை நகராட்சி தலைவர் தகவல்
தர்மபுரி
,ஆக.30: புதர் மண்டி, துர்நாற்றம் வீசும் மயானத்தை மாதிரி பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் கூறினார்.தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட பச்சையம்மன் மயானம்
6 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு 100 வருடங்களுக்கு மேல் சடலங்கள் புதைக்கப்படுகிறது. பழைமையான மயான பகுதி என்பதால், கல்லறைகளை சுற்றி முட்புதர்கள் மண்டிக் கிடக்கின்றது. மேலும் சடலத்தை புதைக்க வருபவர்கள் சடங்குகளை செய்துவிட்டு, மாலை மற்றும் இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை தூக்கி எறிந்துவிட்டுச் செல்கின்றனர். இதனால் சுடுகாடு பகுதியில் சுகாதார மற்ற நிலை உள்ளது.சிலர் மீன்
, கோழி கழிவுகளையும் கொட்டுகிறார்கள். செப்டிக் டேங் சுத்தம் செய்த தண்ணீரையும் வாகனங்களில் கொண்டுவந்து கொட்டுகின்றனர். இதனால் மயான பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மயானத்தில் உள்ள முட்புதரை அகற்றி, தூய்மைப் படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து நகரமன்ற தலைவர் அனந்தகுமார்ராஜாவிடம் கேட்டபோது
, ‘நகராட்சி மயானத்தில் முட்புதர் அகற்றப்பட்டு, சுகாதார பகுதியாக மாற்றப்படும். சுடுகாட்டை சுற்றிலும் மரங்கள் நட்டு மாதிரி பூங்காவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். வெளியில் இருந்து கழிவு பொருட்கள் கொட்டுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.