தினமலர் 21.08.2010
புதிய கட்டடத்தில் மாநகராட்சி பணிகள் ஆரம்பம்
தூத்துக்குடி, தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டடத்தில் நேற்று முதல் அலுவலக பணிகள் துவங்கியது. முதல், முதலாக ராஜீவ் பிறந்தநாளையொட்டி நல்லிணக்கநாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.தூத்துக்குடியில் நேற்று ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் விழா அரசுத்துறை சார்பில் நல்லிணக்க நாளாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அரசு அலுவலகங்களில் நல்லிணக்கநாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி புதிய கட்டடத்தை கடந்த 5ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த கட்டடத்தில் நேற்று மாநகராட்சி பணிகள் துவங்கியது. முதலில் கமிஷனர் அறையில் கமிஷனர் குபேந்திரன் பணிகளில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பணி செய்ய துவங்கினர். முன்னதாக மாநகராட்சி புதிய கட்டடத்தில் பால் காய்ச்சப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து புதிய கட்டடத்தில் காய்ச்சப்பட்ட பால் கவுன்சிலர்கள், ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. மாநகராட்சி மேயர் கஸ்தூரிதங்கம், கமிஷனர் குபேந்திரன், இன்ஜினியர் ராஜகோபாலன், இளநிலை பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் புதிய கட்டடத்தில் முதல் நிகழ்ச்சியாக ராஜீவ் பிறந்த நாளை ஒட்டி நல்லிணக்க நாள் உறுதி மொழி மேயர் தலைமையில் எடுக்கப்பட்டது. மேயர் கஸ்தூரிதங்கம் நல்லிணக்க நாள் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.