தினமணி 18.02.2010
புதிய குடிநீர்த் திட்டத்துக்கு மதிப்பீடு செய்ய அரசுக்குப் பரிந்துரை
தேனி, பிப்.17: தேனி– அல்லிநகரம் நகராட்சிப் பகுதி புதிய குடிநீர் திட்டத்துக்கு மதிப்பீடு செய்ய அரசுக்குப் பரிந்துரைத்து நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந் நகர்மன்ற அவசரக் கூட்டம் அதன் தலைவர் பழனிச்சாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு துணைத் தலைவர் இலங்கேஸ்வரன், நகராட்சி ஆணையர் மோனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேனி நகராட்சிப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு முல்லைப் பெரியாறு அணையை நீர் ஆதாரமாகக் கொண்டு, லோயர்கேம்ப்பிலிருந்து புதிய குடிநீர்த் திட்டம் மூலம் குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டு வர கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் தீர்மானித்திருந்தது.
இந் நிலையில், புதிய குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற நகர்மன்ற அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் லோயர்கேம்ப் குடிநீர்த் திட்டத்துக்கு மதிப்பீடு செய்ய அரசுக்குப் பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.