தினமலர் 29.06.2010
புதிய சென்ட்ரல் மார்க்கெட்டில் கடை ஒதுக்க குலுக்கல் எப்போது
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில், கடைகளை ஒதுக்க அடுத்த மாதம் 2ம் தேதி குலுக்கல் நடக்கிறது.புதிய மார்க்கெட் ஏற்கனவே திறக்கப்பட்டாலும் இன்னமும், பழைய மார்க்கெட்டில் இருந்து கடைகள் இங்கு மாறவில்லை. புதிய மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் டெபாசிட் செலுத்தாததே காரணமாக இருந்தது. தற்போது டெபாசிட் செலுத்தத் துவங்கி உள்ளனர்.பழைய மார்க்கெட்டில் மொத்தம் உள்ள 524 கடைகளில் 470 பேர் டெபாசிட் செலுத்தி, “ஷிப்டிங்‘ முறையில் இடம் மாறுகின்றனர். மீதி கடைகளுக்கு ஏலம் ஏற்கனவே முடிந்து விட்டது. “ஷிப்டிங்‘ முறையில் இடம் மாறுவோருக்கு, ஜூலை 2ம் தேதி குலுக்கல் நடத்தி, கடைகள் ஒதுக்கப்படும். தக்காளி, வாழை இலை, நாட்டுக் காய்கறி, இங்கிலீஷ் காய்கறி என தனித்தனியாக குலுக்கல் நடத்தப்படும். எண்கள் எழுதப்பட்ட, சீட்டுகளை வியாபாரிகளே எடுத்து, எந்த எண் வருகிறதோ, அக்கடையை வைத்துக் கொள்ள வேண்டும்.புதிய மார்க்கெட்டில் 1100 தரைக்கடைகளுக்கு இடம் ஒதுக்கப்படும். இக்கடைகளுக்கான ஏலம் ஜூலை 1ம் தேதி நடத்தப்படும். பெரிய நிரந்தர கடைகளுக்கு 60 ஆயிரம் ரூபாய், சிறு கடைகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் டெபாசிட் பெறப்படுகிறது. தரை கடைகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் பெறப்படும். டெபாசிட் மூலம் மட்டும் மாநகராட்சிக்கு 10 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது.இப்பணிகள் முடிந்த பிறகு, புதிய மார்க்கெட் முழுவீச்சில் செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.