தினமலர் 26.07.2012
‘புதுவரவு’க்கு துப்புரவு உபகரணம் வினியோகம்
திருச்சி: திருச்சி மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஐந்து வார்டுகளுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள துப்புரவு பணியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருச்சி மாநகராட்சி மரக்கடை பகுதியில் உள்ள மாநகராட்சி கிடங்கு வளாகத்தில் தளவாட சாமான்கள் மற்றும் புதிதாக வாங்கப்பட்டுள்ள துப்புரவுப் பணியாளர்களுக்கான உபகரணங்களை மேயர் ஜெயா நேற்று பார்வையிட்டார்.அரியமங்கலம் கோட்டம் டைமண்ட் ஜூப்ளி வளாகத்தில் புதிதாக வாகன நிறுத்துமிட வசதியுடன் கூடிய வணிக வளாகம் கட்டுவது குறித்தும், காந்தி மார்க்கெட் வளாகத்தை மேம்படுத்துவது குறித்தும் மேயர் ஆய்வு செய்தார்.தொடர்ந்து, 23வது வார்டில் பாலக்கரை மெயின்ரோட்டில் எட்டு லட்ச ரூபாய் மதிப்பில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தேங்காமல் வடிய, நடைபாதை வசதியுடன் வடிகால் கட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
“மாநகராட்சியின் அனைத்துப்பகுதிகளிலும் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள 18 லட்ச ரூபாய் மதிப்பில் துப்புரவு உபகரணங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, இரண்டு லட்ச ரூபாய் மதிப்பில் துப்புரவு உபகரணங்கள் வாங்கப்பட்டு, மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட ஐந்து வார்டுகளுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அனைத்து வார்டுகளுக்கும் தேவையான துப்புரவு உபகரணங்கள் வழங்கப்படும்’ என்று மேயர் ஜெயா தெரிவித்தார்.ஆய்வின்போது, கமிஷனர் தண்டபாணி, கோட்டத்தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.