தினமணி 16.03.2010
புவியியல் தகவல் அமைப்புப் பணி மதுரை மாநகராட்சியில் துவக்கம்
மதுரை,மார்ச் 15: மதுரை மாநகராட்சியில் புவியியல் தகவல் அமைப்பு முறையில் (ஜி.எஸ்.ஐ.) அடிப்படை வரைபடம் (பேஸ் மேப்) சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை துவங்கியது.
தல்லாகுளம் சுகாதார அலுவலகத்தில் இப்பணியை மேயர் கோ.தேன்மொழி தொடங்கி வைத்தார். கமிஷனர் எஸ்.செபாஸ்டின், துணை மேயர் பி.எம்.மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கமிஷனர் எஸ்.செபாஸ்டின் செய்தியாளர்களிடம் கூறியது:
“பேஸ் மேப்‘ சரிபார்க்கும் பணியில் குழுவிற்கு 2 நபர்கள் வீதம் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள அபிவிருத்திப் பகுதிகள், கட்டடங்கள், பாதாளச் சாக்கடைகள், சாலைகள், குடிநீர் விநியோக அமைப்புகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பஸ் நிலையங்கள், போக்குவரத்து அமைவிடம், பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து இனங்களும் குறிக்கப்படும்.
தகவல்களை சரிபார்க்கும் பணியை டாடா நிறுவனத்தினர் மேற்கொள்ளவுள்ளனர். இதுதொடர்பான பணியாளர்கள் நேரில் ஆய்வு செய்யத் துவங்கியுள்ளனர். எனவே, பணியாளர்கள் கொண்டுவரும் படிவத்தைப் பூர்த்தி செய்ய பொதுமக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் இசக்கிமுத்து, மாமன்ற உறுப்பினர்கள் கருப்பையா, பொன்.முத்துராமலிங்கம், தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், உதவி கமிஷனர் (வருவாய்) ரா.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.