தினமலர் 06.08.2010
பூ மார்க்கெட் ஏலம் தற்காலிக நிறுத்தம் வியாபாரிகள் எதிர்ப்பால் கமிஷனர் முடிவு
கோவை : கோவை– மேட்டுப்பாளையம் ரோட்டில் நவீன வசதிகளுடன் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்டுள்ள புதிய பூமார்க்கெட்டிற்கான ஏலத்தை தற்காலிகமாக நிறுத்திவப்பதாக மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார். கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் பன்னீர்செல்வம் பூமார்க் கெட் செயல்பட்டு வருகிறது. சில்லறையில் பூ விற்பனை நடந்து வருகிறது. தரைகடைகள் மற்றும் மேடைகள் தவிர அங்காடிக்கடைகள் மூன்று தரங்களில் வரிசைப்படுத்தப்பட்டு மாநகராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டுள்ளது. மாதம் தோறும் குத்தகைதொகையை மலர் வியாபாரிகள் செலுத்தி வருகின்றனர்.
இதற்கு எதிரே மாநகராட்சி பள்ளி வளாகம் இருந்த பகுதியில் ஒரு கோடி ரூபாய் செலவில் இரண்டு தளங்களை கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய பூமார்க்கெட் அமைக்கப்பட்டது. இதை ஏலம் விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக பூ வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா தலைமை வகித்தார். விவசாயிகள் மற்றும் பூ வியாபாரிகள் என்று நூற்றுக்கும் அதிகமானவர்கள் கருத்துக்கேட்பில் பங்கேற்றனர்.
உழவர் உழைப்பாளர் கட்சி செயலாளர் சின்னச்சாமி, மலர் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், பூ வியாபாரிகள் என்று ஏராளமானவர்கள் கருத்துக்களை கூறினர்.இதற்கடுத்து கமிஷனர் அன்சுல்மிஸ்ரா பேசியதாவது: கோவை மாநகராட்சி தீர்மானத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னரே ஒரு கோடி செலவில் பூமார்க்கெட் கட்டப் பட்டுள்ளது. “பூமார்க்கெட் வேண்டாம்;வணிகவளாகமாக மாற்றுங்கள்‘ என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. புதியதாக கட்டப்பட்ட பூமார்க்கெட் கட்டடடத்தை மொத்த விற்பனைக்கும் பழைய மார்க்கெட்டை சில்லறை விற்பனைக்கும் பயன்படுத்தலாம். எக்காரணம் கொண்டும் ஏலம் நிறுத்தி வைக்கப்படமாட்டாது. வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, இரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அது வரை புதிய பூமார்க்கெட் ஏலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். மேலும் இது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்.இவ்வாறு கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறினார்.