பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் நகராட்சி ஆணையர் போ. குருசாமி.
பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் நகராட்சி ஆணையர் போ. குருசாமி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம், தாளக்குடியிலிருந்து குழாய் மூலம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம், நகராட்சியில் 4,918 பேர் குடிநீர் இணைப்பு பெற்று பயன்பெறுகின்றனர்.
தற்போது கோடைகாலம் என்பதால், தாளக்குடியில் நீர் ஊற்று குறைவு காரணமாக குடிநீர் குறைந்தளவே கிடைக்கிறது.
எனவே, இதைக் கருத்தில்கொண்டு பொதுமக்கள் சிக்கனமாக குடிநீரைப் பயன்படுத்த வேண்டும். ஒரு சில இணைப்புகளில், பொதுமக்கள் மின் மோட்டார் வைத்து குடிநீர் பிடிப்பதாகத் தெரியவருகிறது. அவ்வாறு பிடிப்பதால், நகராட்சியில் உள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளுக்கும் தண்ணீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, சட்ட விரோதமாக மின் மோட்டர் மூலம் குடிநீர்ப் பிடிப்பது தெரியவந்தால் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதோடு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றார் அவர்.