தினமலர் 06.10.2010
பெரம்பூரில் அழகிய பூங்காவுடன் நவீன ஆட்டிறைச்சி கூடம்
பெரம்பூர்: “நவீன முறையில் அழகிய பூங்காவுடன், 48 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் பெரம்பூர் ஆட்டிறைச்சிக் கூடம், வரும் டிசம்பர் மாதம் திறக்கப்படும்‘ என, மேயர் தெரிவித்தார்.
பெரம்பூரில் நவீன முறையில் அழகிய பூங்காவுடன், 48 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் ஆட்டிறைச்சிக் கூடத்தை சென்னை மேயர் சுப்ரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னை பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் இந்த ஆட்டிறைச்சிக் கூடம் 1903ம் ஆண்டு கட்டப்பட்டது. பழைமையான இந்த கூடம், 48 கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் கட்டப்பட்டு வருகிறது. 9.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடத்தில், 4 ஏக்கர் பரப்பளவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீதமுள்ள இடத்தில் அழகி பூங்காவுடன், மேலும் மூன்று பகுதிகளில் குளிர்சாதன வசதியும், இரண்டு லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் நிலையமும் அமைக்கப்படுகிறது. அதன் மூலம் நவீன தொழில் நுட்பத்துடன் இறைச்சிக்காக பிராணிகள் வெட்டப்படும் போது, வெளியேறும் கழிவுகள் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாமல் சுத்திகரிக்கப்படும். ஒரு மணி நேரத்திற்கு 250 ஆடுகள் வெட்டும் திட்டத்தை மாற்றி, வியாபாரிகளின் கோரிக்கையின்படி 500 ஆடுகளும், 60 மாடுகளும் வெட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாடுகளை வெட்ட தனியாக வசதி செய்து தரப்படும். இறைச்சிகளை விற்பதற்காக 20க்கும் மேற்பட்ட சிறிய வியாபாரிகளுக்கு வணிக வளாகம் கட்டித் தரப்படும். ஆய்வகம், மழைநீர் வடிகால்வாய், பயோ பில்டர், குளிர்சாதன வசதிகள் மற்றும் அழகிய பூங்காவுடன் கட்டப்படும் இந்த நவீன ஆட்டிறைச்சி கூடம் வரும் டிசம்பர் மாதம் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வு நிகழ்ச்சியில் வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ., மண்டல குழுத்தலைவர் கன்னியப்பன், தலைமை பொறியாளர் விஜயகுமார் உட்பட பலர் இருந்தனர்..