தினமலர் 02.09.2010
பெரிய கோவில் விழா வளர்ச்சிப்பணிகள் நகராட்சி நிர்வாக இயக்குனர் நேரில் ஆய்வு
தஞ்சாவூர்: தஞ்சை நகராட்சிப்பகுதியில் பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவுக்காக நடந்து வரும் வளர்ச்சிப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி ரோட்டில் 70 லட்சம் ரூபாயில் தடுப்புச்சுவரில் மின்கம்பம் அமைக்கும் பணி, பாலாஜி நகர், வ.உ.சி., நகரில் சிமெண்ட் ரோடு அமைக்கும் பணி, பெரிய கோவில் முன் உள்ள சோழன் சிலை அருகே 25 லட்சத்தில் நீரூற்றுடன் அமைக்க உள்ள பூங்காப்பணி, கரந்தை மார்க்கெட் அருகே 75 லட்சம் ரூபாயில் அமையும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, சீனிவாசபுரம் ராஜாஜி சாலை, ராஜராஜன் தெருவில் 58.72 லட்சத்தில் அமையும் சாலைப்பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
அப்பணிகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், கூடுதல் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கினார்.
கலெக்டர் சண்முகம் கூறுகையில், “”தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவுக்காக தமிழக அரசு 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், பல வளர்ச்சிப்பணிகள் நகராட்சி சார்பில் நடக்கிறது. விழா நடக்கும் முன்பு சில பணிகளும், விழாவுக்குப்பின் சில பணிகளும் முடிவடையும் வகையில் பணிகள் நடக்கிறது. விழாவுக்கு இடையூறு இல்லாத வகையில் பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,” என்றார்.
மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சாந்தி, தஞ்சை நகராட்சி ஆணையர் நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.