தினமணி 18.04.2010
பேராவூரணி பேரூராட்சிப் பகுதிகளில் விளம்பரம் செய்ய கட்டுப்பாடுகள்
பேராவூரணி, ஏப். 17: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பதாகைகள் வைப்பது, ஒலிப்பெருக்கி பயன்படுத்தி விளம்பரம் செய்வது ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவர் என். அசோக்குமார் தலைமை வகித்தார்.
விளம்பர பாதாகைகள் வைப்பதற்கு சதுர அடிக்கு 50 பைசா வீதம் செலுத்தி, பேரூராட்சி அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். வியாபார நிறுவனங்களுக்கு இடையூறு இல்லாமல் அதிகபட்சம் 5 நாள்கள் விளம்பர பதாகைகளை வைத்துக் கொள்ள அனுமதிப்பது. மீறும்பட்சத்தில், விளம்பர பதாகைகளை முன்னறிவிப்பின்றி பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றிக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. அதேபோல, ஒலிப்பெருக்கி பயன்படுத்துவோர் மிதமான சப்தத்தில் விளம்பரம் செய்ய வேண்டும். காற்று ஒலிப்பான்களை பேரூராட்சிப் பகுதியில் தடை செய்யுமாறு காவல் துறையினரை கேட்டுக் கொள்வது. கேட்பாரின்றி சுற்றித் திரியும் மாடுகளை அகற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் ப. ஜனார்த்தனன், வர்த்தகர் கழக நிர்வாகிகள், டிஜிட்டல் போர்டு தயாரிப்பாளர்கள், ஒலிப்பெருக்கி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.