பேரூராட்சி இயக்குனர் அலுவலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றம்
பொதட்டூர்பேட்டை : பேரூராட்சி இயக்குனர் தலைமை அலுவலகம் கட்டுவதற்கு, பேரூராட்சிகளின் நிலைகளுக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து, அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பள்ளிப்பட்டு அடுத்த, பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், தலைவர் தண்டபாணி தலைமையில், அவசர கூட்டம் நடந்தது.
இதில், தற்போது சென்னை குறளகத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும், பேரூராட்சிகளின் இயக்குனர் அலுவலகம், திருவல்லிக்கேணி வட்டம், மைலாப்பூரில் புதிதாக அரசுக்கு சொந்தமான கட்டடம் கட்ட தேவைப்படும் நிதியை, அந்தந்த பேரூராட்சிகளின் நிதி நிலைகளுக்கு ஏற்ப, பொது நிதியில் இருந்து வழங்க ஒப்புதல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், துணைத் தலைவர் ரவி, வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.