தினமலர் 01.11.2010
பேரூராட்சியில் புதிய அலுவலகம் கட்டும் பணி தீவிரம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சியில் 32 லட்சம் ரூபாயில் புதிய அலுவலகம் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சி அலுவலக கட்டடம் பழுதடைந்து, மழைக்கு ஒழுகுகிறது. பழைய அலுவலக கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. கவுன்சில் கூட்டம், அலுவலக பயன்பாட்டிற்கு பழைய கட்டடம் போதுமானதாக இல்லாததால், புதிதாக அலுவலக கட்டடம் கட்டுவதற்கு தீர்மானம் செய்யப்பட்டது. பேரூராட்சி அலுவலக நுழைவாயிலில் அலுவலக கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கு, பகுதி– 2 திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாயும், பொது நிதியில் 8 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது. அலுவலகம் முன்பாக பூங்காவும், வெளிப்பகுதியில் கழிப்பிடமும் கட்ட மேலும் 8 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 28 லட்சம் ரூபாயில் புதிய பொழிவுடன் அலுவலக கட்டடம் கட்டப்படுகிறது. பேரூராட்சி செயல்அலுவலர் நாகமுத்து கூறுகையில், “”புதிய கட்டட பணிகள் நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவு பெறும். புதிய அலுவலகம் கட்டடம் திறக்கப்பட்டதும், அலுவலகம் இடமாற்றம் செய்யப்படும். கவுன்சில் கூட்டமும் புதிய கட்டடத்தில் நடத்தப்படும். பழைய அலுவலக கட்டடம் ஆவண இருப்பு அறையாக பயன்படுத்தப்படும்” என்றார்.