தினமலர் 02.12.2013
‘பொதுமக்கள் அழைத்தால் போனை எடுங்கள்’அதிகாரிகளுக்கு மாநகராட்சி அறிவுரை
சென்னை:பொதுமக்கள், அலைபேசியில் தெரிவிக்கும் புகார்களை, ஊழியர்கள் அலட்சியம் காட்டாமல், கேட்டு, நிவர்த்தி செய்ய நடவடிக்கை, எடுக்க வேண்டும் என்று, மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
சென்னையில், அடிப்படை வசதிகள், சம்பந்தமான புகார்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை அலைபேசியில் அழைத்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு புகார் தெரிவிக்க அதிகாரிகளை அழைத்தால், பெரும்பாலான நேரங்களில் அவர்கள் எடுத்து பேசுவதில்லை. இதனால், களத்தில் உள்ள புகார்கள், அதிகாரிகளுக்கு தெரியா மலேயே உள்ளது.
தொடர் புகார்
இதுகுறித்து, தொடர்ந்து புகார்கள் எழவே, பொதுமக்களின் அழைப்புகளை தவறாமல் எடுத்து பேசவும், தவிர்க்க முடியாத பட்சத்தில், மீண்டும் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசி, புகார்களை கேட்டு, நடவடிக்கை எடுக்கவும், பணியாளர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநகராட்சி, அனைத்து துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை, பொதுமக்கள் தொடர்பு கொள்ளும்போது, அந்த அழைப்புகள் தவறவிடப்படுகின்றன. இதனால், பொதுமக்களிடம் புகார்களை பதிவு பெற முடியாமல் போகிறது.
நடவடிக்கை
தவற விட்ட, அழைப்புகளை, பணியாளர்கள், மீண்டும் தொடர்பு கொண்டு பேச வேண்டும். புகார்களை பதிவு செய்து, அதன் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.
சாலை அமைக்கும், பணிகளை மேற்கொள்ளும் போது, தெருவில் வீடுகள் உள்ள மட்டத்தை பொறுத்து, பழைய சாலையை தோண்டி எடுத்து, வீடுகளின் மட்டத்திற்கு ஏற்ப சாலை அமைக்க வேண்டும். அப்போது தான், வீடுகளுக்குள் மழைநீர் செல்லாமல் இருக்கும். இவ்வாறு, மாநகராட்சி தெரிவித்து உள்ளது.