தினமணி 29.09.2009
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகத்தில் மாற்றம்
பொள்ளாச்சி, செப். 28: பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில் குடிநீர்த் திட்ட அபிவிருத்திப் பணிகள் நடப்பதால்,குடிநீர் விநியோகத்தில் சில மாறுபாடுகள் செய்யப்படும் வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர் மு. வரதராஜ் திங்கள்கிழமை விடுத்த செய்தி:
பொள்ளாச்சி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீர்த் திட்டப் பணிகள் விரைந்து நடந்து வருகின்றன. இப் பணியில் பழைய பிரதானக் குழாய்களை அகற்றிவிட்டுப் புதிய குழாய்கள் பதிக்கும் பணியும் கூடுதலாகப் பகிர்மானக் குழாய்கள் பதிக்கும் பணியும் நடந்து வருகிறது. மேலும் பழைய மோட்டார் பம்ப் செட்டுகளுக்குப் பதிலாகப் புதிய மோட்டார் மற்றும் பம்ப் செட்டுகள் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது. அதனால் பொள்ளாச்சி நகருக்கு வழக்கமாக வழங்கப்படும் குடிநீரின் அளவு, விநியோகக் கால அளவுகள் மாறுபட வாய்ப்புள்ளது. மேலும் பணியின்போது குழாய்கள் உடைவதால் அவற்றைச் சரிசெய்யும் பணியும் நடந்து வருகிறது. அதனால் குறித்த காலத்துக்குள் குடிநீர் விநியோகம் வழங்குவதில் மாறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
கூடுதல் குடிநீர்த் திட்டத்தை நல்லமுறையில் செயல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். குடிநீரைச் சிக்கனமாகவும் காய்ச்சியும் பயன்படுத்த வேண்டும்.