தினமலர் 10.12.2010
பொள்ளாச்சி நகராட்சி பள்ளியில் கூட்டு துப்புரவு பணி
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி சார்பில் வாரம் ஒருமுறை நடக்கும் கூட்டு துப்புரவு பணியில் சமத்தூர் ராமஐயங்கார் நகராட்சி பள்ளி வளாகம் தூய்மை செய்யப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி சார்பில் வாரம் ஒருநாள் நகராட்சி பகுதியில் ஒட்டுமொத்த துப்பரவு பணியாளர்களை கொண்டு கூட்டு துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகிறது. மகாலிங்கபுரத்தில் 8வது வார்டுக்கு உட்பட்ட சமத்தூர் ராமஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.நகராட்சி கமிஷனர் பூங்கொடி அருமைக்கண், நகர் நல அலுவலர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், சுகாதார ஆய்வாளர்கள் சுப்புராஜ், வேலுசாமி, ஜெரால்டு, செல்வபாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் துப்புரவு பணியாளர்கள் 100 பேர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
பள்ளி வளாகத்தில் இருந்து புதர் செடிகளை அகற்றி சுத்தம் செய்தனர். அதேபோன்று, நகராட்சி புதிய மற்றும் பழைய பஸ்ஸ்டாண்டில் சுகாதார ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், மதன்மோகன் ஆகியோர் மேற்பார்வையில் கழிப்பிடம், பஸ் ஸ்டாண்ட் உள்பகுதியில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். சாக்கடைகளில் கழிவுகள், குப்பைகளை அகற்றி சுகாதார பணிகள் மேற்கொண்டனர்.நகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், “நகராட்சி அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையில் கூட்டு துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகிறது. வாரம் தோறும் பஸ் ஸ்டாண்ட், காய்கறி மார்க்கெட்டில் சுத்தம் செய்வதுடன் ஒவ்வொரு வார்டாக தேர்வு செய்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும். வாரம் தோறும் தேர்வு செய்யப்படும் வார்டில் துப்புரவு பணியாளர்கள் 100 பேரும், பஸ் ஸ்டாண்டில் 50 பணியாளர்களும், மார்க்கெட்டில் 70 பணியாளர்களும் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள்‘ என்றனர்.