போடி நகராட்சியில் தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி
போடி நகராட்சியில் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான அடையாள எண் கொண்ட தேசிய அடையாள அட்டை ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்பட உள்ளது. இதற்கான புகைப்படம் எடுக்கும் பணி, போடி வட்டத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
போடி நகராட்சிப் பகுதியில் தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 33 வார்டுகளில் முதல் கட்டமாக 6 வார்டுகளில் இப்பணி நடைபெற்று வருகிறது. 1 ஆவது வார்டுக்கு புதூர் காமாட்சியம்மன் கோவில் மண்டபத்திலும், 4, 5 வார்டுகளுக்கு நகராட்சி அலுவலகத்திலும், 6 ஆவது வார்டுக்கு கள்ளர் ஆரம்பப் பள்ளியிலும், 28, 29 ஆவது வார்டுகளுக்கு விக்னேஷ்வரா ஆசிரியர் பயிற்சி மையத்திலும் புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நடைபெறும் இப்பணியில் புகைப்படம், கை விரல் ரேகைகள், கருவிழித்திரை ஆகியவை பதிவு செய்யப்பட்டு, உடனுக்குடன் அதற்கான சிறப்பு அடையாள எண்ணுடன் கூடிய ஒப்புதல் சீட்டும் வழங்கப்படுகிறது.
புகைப்படம் எடுக்கும் பணிகளை, போடி வட்டாசியர் பெ. முருகன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, போடி நகராட்சி ஆணையர் எஸ். சசிகலா, பொறியாளர் ஆர். திருமலைவாசன், மேலாளர் ப. பிச்சைமணி, கணக்காளர் முருகதாஸ், கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் ஆணையர் கூறுகையில், இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், துண்டுப் பிரசுரங்கள், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் செய்து வருகிறோம். பொதுமக்களும் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். குறைந்தபட்சம் ஒரு வார்டுக்கு 4 நாள்கள் புகைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் வசதிக்காக கூடுதல் நாள்கள் ஒதுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் புகைப்படம் எடுக்க வேண்டும். வெளியூரில் உள்ளவர்களுக்கும், விடுபட்டவர்களுக்கும் இரண்டாம் கட்டமாக புகைப்படம் எடுக்கப்படும் என்றார்.