தினமணி 02.06.2010
போடியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு
போடி, ஜூன் 1: போடி நகராட்சியில் திட்டச் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடியிருப்பு வீடுகளை, நகராட்சியினர் இடித்து அப்புறப்படுத்தினர்.
தற்போது, போடி நகராட்சிப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், 10-வது வார்டு வ.உ.சி. நகரில் ஒழுகால் பாதைப் பகுதியில் 40 அடி மற்றும் 60 அடி திட்டச் சாலைகள் செல்கின்றன. இந்த சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பு வீடுகள் கட்டியும், பொதுப் பாதையில் வேலி அமைத்தும் குடியிருந்து வந்தனர்.
இது குறித்து, இப்பகுதி மக்கள் நகராட்சியில் புகார் செய்தனர். அதன்பேரில், நகரமைப்பு ஆய்வாளர் முருகானந்தம், சர்வேயர் அன்னக்கொடி மற்றும் நகராட்சி அலுவலர்கள் அளவீடு செய்ய சென்றபோது, ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் அப்பணி நிறைவேற்றப்பட்டது.
இதில், வீடுகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. எனவே, அவற்றை இடிக்க நகராட்சி ஆணையர் க. சரவணக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நகராட்சி அலுவலர்கள் ஆக்கிரப்பு வீடுகளை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தி, பொதுப் பாதையில் போடப்பட்டிருந்த வேலியையும் அகற்றினர்.
மேலும், பிரச்னை ஏற்படாமலிருக்க, போடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சேகர்சிங், சப்–இன்ஸ்பெக்டர்கள் தேன்மொழி, ராதாகிருஷ்ணன், கோட்டையப்பன் மற்றும் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில், போடி வட்டாட்சியர் சு. ராஜசேகரன், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இது குறித்து நகராட்சி ஆணையர் கூறியது: திட்டச்சாலையில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்த வீடுகள் அகற்றப்பட்டன. இப்பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைத்து, தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குடியிருப்பு வீடுகள் அப்புறப்படுத்தும் பணி நடைபெறும் என்றார்.