தினமலர் 27.03.2010
போடியில் இலவசமாக பிறப்பு சான்றிதழ் வழங்க ஏற்பாடு
போடி : போடியில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் வகையில், ஏப்.,1 முதல் ஜூன் மாத இறுதி வரை நகராட்சி மூலம் பிறப்பு சான்றிதழ் இலவசமாக வழங்க, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நகராட்சி கமிஷனர் சரவணக்குமார் கூறுகையில்,”குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு பிறப்பு சான்றிதழ் அவசியம். பள்ளி துவங்கும் நாளில், குழந்தைகளுக்கு நகராட்சி அலுவலகத்திற்கு சென்று பிறப்பு சான்றிதழ் கேட்கும் போது அலுவல் பணிகள் காரணமாக தாமதம் ஏற்படுகிறது. உரிய நேரத்தில் பிறப்பு சான்றிதழ் கிடைக்காத சூழ்நிலையில் பெற்றோர், குழந்தைகளை உரிய பள்ளியில் சேர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் , போடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2005 ம் ஆண்டிலிருந்து தற்போது வரை பிறந்த குழந்தைகளுக்கு ஏப்., 1 முதல் ஜூன் மாதம் இறுதி வரை பிறப்பு சான்றிதழ் இலவசமாக நகராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப் படும். இதற்கு குழந்தை பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றை பெற்றோர் தெரிவித்து 24 மணி நேரத்தில் பிறப்பு சான்றிதழ் வழங்கப் பட உள்ளது. இந்த வாய்ப் பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.