போடியில் நவீன எரிவாயு தகன மேடை திறப்பு
போடி நகராட்சி மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
போடி நகராட்சி மயானத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. இந்த எரிவாயு தகன மையம் 2 மாதங்களுக்கு முன் சோதனை ரீதியாக திறக்கப்பட்டு, சடலங்கள் எரியூட்டப்பட்டன. இதில், பணியாளர்களுக்கு உரிய பயிற்சிகள், ஓட்டன்சத்திரம் நகராட்சி மூலம் வழங்கப்பட்டது.
பயிற்சி மற்றும் சோதனைகள் நிறைவுபெற்று, முறையான திறப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், நகராட்சி ஆணையர் எஸ். சசிகலா தலைமை வகித்தார். நகராட்சிப் பொறியாளர் ஆர். திருமலைவாசன், துணைத் தலைவர் ஜி. வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்றத் தலைவர் வி.ஆர். பழனிராஜ், எரிவாயு தகன மேடை மையத்தை திறந்து வைத்தார்.
பின்னர், மயானத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர், ஆணையர் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்னர். பெரியார் சேவை மைய தலைவர் ச. ரகுநாகநாதன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், வர்த்தகர் சங்கம், லயன்ஸ் சங்கம், ரோட்டரி சங்கம், ஏலக்காய் வியாபாரிகள் சங்கம், நால்வர் தெய்வீகப் பேரவை, விவேகானந்தா சமூக சேவை அறக்கட்டளை, சர்வலிங்கம் அன்னதான அறக்கட்டளை ஆகியவற்றின் நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.