தினகரன் 26.08.2010
போலியை தடுக்க பிறப்பு இறப்பு சான்றிதழில் பாதுகாப்பு குறியீட்டு எண் புதுச்சேரி நகராட்சி அதிரடி
புதுச்சேரி, ஆக. 26: புதுச் சேரி நகராட்சி ஆணையர் அசோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
சமீப காலங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் போலியாக தயார் செய்யப்பட்டு, பல்வேறு காரணங்களுக்காக ஏமாற் றும் நோக்குடன் உபயோகப்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நகராட்சியால் வழங்கப்படும் சான்றிதழ்களில் ஒரு பாதுகாப்பு குறியீட்டு எண் கணினி வழியாக குறிப்பிடப்பட்டால் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை எளி தாக கண்டுபிடிக்க ஏதுவாகும் என்பதற்காக ஒரு மென்பொருள் புதுச்சேரி தேசிய தகவல் மையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று நகராட்சியில் இருந்து வழங்கப்படும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களின் நம்பகத் தன்மையை உறுதி செய்ய கணினி மூலம் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு குறியீட்டு எண் சான்றிதழ்களின் கீழ்பகுதியில் அச்சிட்டு வழங்கப்படுகிறது.
வழங்கப்பட்ட சான்றிதழ்களின் நம்பகத் தன் மையை வளைதளம் மூலம் தெரிந்து கொள்ள வசதியும் செய்யப்பட்டுள்ளது. வலைதள முகவரி வெகு விரைவில் வெளியிடப்படும். பிறப்பு, இறப்பு சான்றி தழை ஏற்றுக் கொள்ளும் நிறுவனங்கள், கல்விக் கூடங்கள், அரசு மற்றும் அரசு சாரா துறைகள் இதனை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சான்றிதழ்களில் சிறிதளவு சந்தேகம் ஏற்பட்டாலும், அதனை நகராட்சி மூலம் உண்மை தன்மையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இதுகுறித்து அனைவரின் ஒத்துழைப் பும் கோரப்படுகிறது. இவ் வாறு அவர் கூறியுள்ளார்.