தினமணி 23.04.2010
மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு இலவச கால்நடைகள்
திண்டுக்கல், ஏப். 22: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான கோசாலையில் உள்ள கால்நடைகள் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குப் பொதுமக்கள் காணிக்கையாக, நேர்த்திக் கடனாக வழங்கிய கால்நடைகளை முதல்வரின் உத்தரவின் பேரில் கோசாலை அமைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த கால்நடைகளை இலவசமாக மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கும் விழா கள்ளிமந்தயம் கோசாலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. திருக்கோயில் அறங்காவலர் ஆ.நாகராஜன் முன்னிலை வகித்தார். ஆட்சியர் மா.வள்ளலார் தலைமை வகித்து 291 மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு கால்நடைகளை வழங்கிப் பேசியதாவது:
கோயிலுக்கு வழங்கப்பட்ட கால்நடைகள் சுயஉதவிக் குழுவினருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும்.
திண்டுக்கல், பழனி போன்ற நகரங்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை கால்நடை பராமரிப்புத் துறை, பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் மூலம் கைப்பற்றப்பட்டு அவைகளை மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர்.
கோயில் இணை இயக்குநர் ராஜமாணிக்கம், அறங்காவலர் குழு உறுப்பினர் இந்திரா ரவிசசந்திரன், திட்ட அலுவலர் மகளிர் திட்டம் பிரேமா, கால்நடை மண்டல இணை இயக்குநர் அறிவழன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் பஷீர் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி ஆணையர் நடராஜன் நன்றி கூறினார்.