தினமணி 05.05.2010
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு பயிற்சி
அரவக்குறிச்சி, மே 4: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டாரப் பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட உள்ள 382 பணியாளர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகிறது.
அந்த வகையில் இப்பணி வரும் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதன் முதல்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பும், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆதாரப் புள்ளி விபரங்களும் சேகரிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், அரவக்குறிச்சி வட்டார அளவில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடவுள்ள 326 கணக்கெடுப்பாளர்கள், 56 மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 382 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முதல்கட்டமாக அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னதாராபுரம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, க.பரமத்தி வட்டார வள மையம் உள்ளிட்ட 3 இடங்களில் பயிற்சி வகுப்பு தொடங்கியது.
அரவக்குறிச்சி மற்றும் சின்னதாராபுரத்தில் பயிற்சி வகுப்புகளை அரவக்குறிச்சி வட்டாட்சியர் உத்தமன் தொடக்கி வைத்தார். க. பரமத்தியில் பயிற்சி வகுப்பை துணை வட்டாட்சியர் சிவசாமி தொடக்கி வைத்தார்.
இதில், மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீடுகள், தலைவர் பெயர், குடிநீர் ஆதார விபரங்கள், விளக்குகளின் எண்ணிக்கை, கழிவு நீர் சேகரிக்கும் விதம், தொலைக்காட்சி பெட்டி, பிரிட்ஜ், போன், செல்போன் உள்ளிட்ட 35 வகையான தகவல்களை சேகரிக்க வலியுறுத்தப்பட்டது.
மேலும், தனிநபர்களுக்கு பிறந்த ஊர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, தொழில், நிரந்தர முகவரி உள்ளிட்ட 14 தகவல்களை சேகரிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.