தினகரன் 23.07.2010
மணம் வீசும் மலர்கள் செடி நடப்படும் குப்பைமேடுகளில் வனவிழா
புதுடெல்லி, ஜூலை 23: அடுத்த முறை குப்பைமேடுகளை தாண்டி செல்லும்போது, மூக்கை பொத்திக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில், குப்பைமேடுகளை சுற்றிலும் மணம் வீசும் மற்றும் மனதை கவரும் வண்ண மலர்ச்செடிகளை நடவு செய்யும் வனவிழாவை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
டெல்லியைச் சுற்றி பல்வேறு இடங்களில் குப்பைமேடுகள் உள்ளன. இந்த இடத்திலும் மற்றும் அதனை காலி பகுதிகளிலும் மணம் வீசும் மற்றும் வண்ண மலர்ச்செடிகளை நட மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக குப்பைமேடு பகுதிகளில் செடிகளை நடும் வகையில் மண்ணை தோண்டும் பணி தொடங்கப்பட்டது.
காஜிப்பூர், பால்ஸ்வா மற்றும் ஓக்லா ஆகியவற்றில் உள்ள குப்பைமேடு பகுதிகளை தாண்டிச் செல்லும் பொதுமக்கள் முகம் சுளிக்கக்கூடிய நிலை இருக்காது. செடிகள் வளர்ந்து நிற்கும்போது அந்தப்பகுதிகளில் நல்ல மணம் வீசுவதுடன், பார்ப்பதற்கு பசுமையாகவும் இருக்கும். செடிகளுக்கு குப்பைகள் நல்ல உரம் என்பதால், அவை சிறப்பாக வளரும்.
பால்ஸ்வாவில் ஜி.டி.கர்னால் பைபாஸ் சாலையில் உள்ள குப்பைமேட்டில் முதல் முறையாக வனவிழா நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டில் குப்பைமேடுகளைச் சுற்றிலும் 2 லட்சம் மரக்கன்றுகள் வரை நடப்பட உள்ளன. மாநகராட்சி நிலைக் குழு குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா கூறியதாவது:
குப்பைமேடுகளில் மணம் வீசும் மலர்களை நடுவதால், முதலில் துர்நாற்றம் குறைவதுடன், குப்பைமேடுகளின் தோற்றமும் அழகாக மாறிவிடும். ஏற்கனவே நிரம்பிவிட்ட குப்பைமேடுகளிலும் மரங்கள் வளர்க்கப்படும். இதனால் அவற்றின் தோற்றமே மாறிவிடும்” என்றார்.
மாநகராட்சி கமிஷனர் கே.எஸ்.மெஹ்ரா கூறுகை யில், புதிதாக பாதாள வாகன நிறுத்தங்களை கட்டுவதற்காக பல்வேறு இடங்களில் நில த்தை தோண்டும் பணி நட ந்து வருகிறது. அங்கு அள்ளப்படும் மணல், குப்பைமேடுகளில் செடிகளை நடுவதற்கு பயன்படுத்தப்படும்.
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி 2012ம் ஆண்டில் இருந்து தொடங்கப்படும். காஜிப்பூர், பால்ஸ்வா, ஓக்லா குப்பைமேடுகளில் இந்த பணிகள் தொடங்கப்படும். மின்சார தயாரிப்புக்கு பின் மிச்சமாகும் மணமற்ற குப்பைகள் பாதி சுரங்கப்பகுதியில் கொட்டப்படும். இவ்வாறு கமிஷனர் கூறினார்.
மாநகராட்சியின் தோட்டக் குழு தலைவர் சவீதா குப்தா கூறுகையில், “பால்ஸ்வாவில் 4,600 செடிகளும், காஜிப்பூரில் 5,500 செடிகளும், குமன்ஹெராவில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் 4,200 செடிகளும், நரேலா & பாவனாவில் 5,500 செடிகளும் நடப்பட்டுள்ளது” என்றார்.