தினமணி 14.05.2010
மணல் திருட்டு: நகராட்சித் தலைவர் திடீர் ஆய்வு
காஞ்சிபுரம், மே 13: காஞ்சிபுரம் பாலாறு பகுதியில் நடைபெறும் மணல் திருட்டை தடுப்பதற்காக நகர்மன்றத் தலைவர் வி.ராஜேந்திரன் மற்றும் குழுவினர் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். காஞ்சிபுரம் பாலாறு பகுதியில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் காஞ்சிபுரம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கோடை காலமான தற்போது தண்ணீர் பிரச்னையும் தலைதூக்கியுள்ளது. இந் நிலையில் முதல் கட்டமாக மணல் திருட்டை தடுப்பது என்று நகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். நகர்மன்றத் தலைவர் வி.ராஜேந்திரன் தலைமையில் நகராட்சி குழுவினர் பாலாறு பகுதிகளுக்குச் சென்றனர். அங்கு மணல் ஏற்றுபவர்கள் முறையான அனுமதியுடன் மணல் ஏற்றுகின்றனரா என்று ஆய்வு செய்தனர். முறையான அணுமதியில்லாமல் மணல் ஏற்றுபவர்கள் குறித்து வட்டாட்சியர் மட்டும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.