தினத்தந்தி 25.06.2013
மண்ணின் தன்மைக்கு ஏற்ப மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு: மழைநீரை
சேமித்து நீர்வளத்தை பெருக்க வேண்டும் பொதுமக்களுக்கு சென்னை குடிநீர்
வாரியம் வேண்டுகோள்
சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னைக்
குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் பி.சந்திரமோகன் நேற்று வெளியிட்ட
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மழைநீர் சேகரிப்பு திட்டம்
சென்னை மாநகரில் 2003–ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தின்
அடிப்படையில் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்
அமைக்கப்பட்டன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, நீரின் தரம் மேன்மை
அடைந்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், வடகிழக்கு பருவமழையை
எதிர்நோக்கி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை கட்டிடங்களில் உருவாக்கி
பராமரித்திட வேண்டும். கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து மழைநீரை தரைப்
பகுதிக்கு கொண்டு செல்ல மழைநீர் வடிகுழாயினை அமைக்க வேண்டும்.
வடிகுழாய்க்கு அல்லது கட்டிடங்களின் அருகில் தரை பகுதியில் 1 மீட்டர்
நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1.5 மீட்டர் ஆழத்திற்கு கசிவு நீர் குழி
ஒன்றை செங்கல் கொண்டு கட்ட வேண்டும். அதன் பின் குழியை கூழாங்கற்கள் அல்லது
கருங்கல் ஜல்லியைக் கொண்டு 1 மீட்டர் ஆழத்திற்கு நிரப்ப வேண்டும்.
திறந்த வெளி கிணற்றில்…
மொட்டை மாடியில் இருந்து வரும் மழைநீரை வடிகுழாய் மூலம் கசிவு நீர்
குழியின் மேற்பரப்பில் விழுமாறு செய்ய வேண்டும். இதுபோன்று முறையாக
கசிவுநீர்குழி அமைத்திட்டால் மொட்டை மாடியில் விழும் மழைநீரை நேரடியாக
பூமிக்குள் ஊறச் செய்யலாம். கசிவுநீர் குழியை சிமெண்ட் மூடி கொண்டு மூட
வேண்டும்.
கட்டிடம் அமைந்துள்ள பகுதி களிமண் பகுதியாக இருந்தால் உரிய முறையில்
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். நீரூட்டல் கிணற்றை
அனைத்து வகையான பகுதிகளில் அமைத்திடலாம். கட்டிட வளாகத்தில் பயன்பாட்டில்
இருக்கும் திறந்தவெளி கிணற்றை நாம் மழைநீர் சேகரிக்க பயன்படுத்தலாம்.
கட்டிடத்தில் இருக்கும் மழைநீர் வடிகுழாய்களை இணைத்து கிணறு இருக்கும்
பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். வடிகட்டும் தொட்டி அமைத்திட்டால் மொட்டை
மாடியில் விழும் மழைநீரை வடிகுழாய் மூலம் பயன்பாட்டு கிணற்றில் செலுத்தி
மழைநீரை ஊறச்செய்யலாம்.
நீர்வளம் பெருக்குவது அவசியம்
பொதுமக்கள் தாமதமின்றி உடனடியாக கட்டமைப்புகளை உருவாக்கி மழைநீரை சேமித்து
நீர் வளத்தை பெருக்கிட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.