தினமணி 12.08.2009
பன்றிக் காய்ச்சலைக் கண்டறிய சென்னையில் கிண்டியிலும், வேலூரில் சி. எம். சி. மருத்துவமனையிலும் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுப்பது தொடர்பாகவும், அதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்பின்பு, அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
“”தமிழகத்தில் இதுவரை 376 நபர்களுக்கு தொண்டை சளி மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்யப்பட்டன. அதில், 54 பேருக்கு இந்த நோய் உள்ளது என உறுதி செய்யப்பட்டு, அதில் 40 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மீதமுள்ள 14 பேர் இப்போது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகளுக்கு… காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியன பன்றிக் காய்ச்சல் நோயின் அறிகுறிகள் ஆகும்.
அதுபோன்ற அறிகுறிகள் எவருக்கேனும் காணப்பட்டால் அவர்களை உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து வர வேண்டும். அவர்களது தொண்டை சளி மாதிரிகள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
அனைத்து அரசு மருத்துவமனைகளும் சுணக்கம் காட்டாமல் இந்தப் பணியைச் செய்ய வேண்டும். பன்றிக் காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை போதுமான அளவில் உள்ளதா என்றும், மருந்து மாத்திரைகள், தற்காக்கும் சாதனங்கள், பரிசோதனை உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளனவா என்பதையும் கேட்டறிய வேண்டும். அனைத்துக் கருவிகளும் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு… பள்ளிகளில் மாணவர்களை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் யாருக்கேனும் இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் தாமதமின்றி உடனடியாகப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பரிசோதனை மையங்கள்… பன்றிக் காய்ச்சலை பரிசோதனை செய்ய சென்னை மற்றும் வேலூரில் பரிசோதனை மையங்கள் உள்ளன. இதர மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில், மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் பரிசோதனை மையங்களை ஏற்படுத்த வேண்டும்.
ஒத்துழைப்பு தர வேண்டும்… பன்றிக் காய்யச்சல் நோயைப் பற்றி மக்கள் எந்த பயமும் கொள்ளத் தேவையில்லை. அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முனைப்புடன் செய்து வருகிறது. எனவே, யாரும் பீதி அடையத் தேவையில்லை” என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, சுகாதாரத்துறை செயலாளர் வி. கே. சுப்புராஜ், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் எம்.குற்றாலிங்கம், சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, மருத்துவக் கல்வி இயக்குநர் எஸ்.விநாயகம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநர் டாக்டர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.