மதுரை மாநகராட்சி ஆணையரின் பதவி உயர்வு ரத்துக்கு இடைக்காலத் தடை
மதுரை மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபாலின் ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்தஸ்து வழங்குவதற்காக 2009-ம் ஆண்டில் 10 மூத்த அதிகாரிகளின் பட்டியலை மத்தியப் பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு அனுப்பியது. அவர்களில் நந்தகோபால் உள்ளிட்ட 7 பேருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்தஸ்து வழங்கி பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் தற்போது முதன்மை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றும் மோகனசுந்தரம் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
மாநில அரசு அனுப்பிய 10 பேர் பட்டியலில் எனது பெயர் இருந்தது. ஆனால் ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு வழங்கப்பட்ட 7 பேர் பட்டியலில் எனது பெயர் இல்லை. ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்ட நந்தகோபால் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
ஆகவே, அந்த 7 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். எனது பெயரையும் அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மோகனசுந்தரம் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வு, 2009-ம் ஆண்டு நந்தகோபால் துறை ரீதியான சில ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொண்டிருந்தார். அவர் மீது சில குற்றச்சாட்டுகளை அரசு பதிவு செய்திருந்தது. எனினும் திடீரென அந்தக் குற்றச்சாட்டுகளை அரசு வாபஸ் பெற்றுள்ளது தெரிய வருகிறது. ஆகவே, நந்தகோபாலுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்தஸ்து வழங்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது என்று அண்மையில் உத்தரவிட்டது.
தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நந்தகோபால் மனு தாக்கல் செய்தார். அவரது மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் எலிபி தர்மாராவ், எம். வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வு, நந்தகோபாலுக்கு வழங்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அந்தஸ்தை ரத்து செய்து தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.