தினமலர் 26.02.2010
மதுரையில் நாய்கள் ‘ஓவர்‘ மேயர் ஒப்புதல்
மதுரை:””மதுரையில் நாய்கள் கொஞ்சம் ஓவர்,” என மதுரையில் நேற்று நடந்த கவுன்சில் கூட்டத்தில் மேயர் தேன்மொழி ஒப்பு கொண்டார்.நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து நடந்த விவாதம்:
பழனிச்சாமி(மார்க்சிஸ்ட்): மதுரையில் வெறி நாய் தொந்தரவு அதிகரித்து வருகிறது. என் வார்டில் ஏராளமான நாய்கள் திரிகின்றன. மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி ஊழியர்கள், நாய்களை கண்டுகொள்வதில்லை.தம்பித்துரை, கணேசன் (தி.மு.க.,): எங்கள் வார்டிலும் தெரு நாய்களுடன் வெறி நாய்கள் திரிவது குறித்தும் பல முறை கமிஷனரிடம் முறையிட்டும்
நடவடிக்கை இல்லை.மேயர் தேன்மொழி: மதுரையில் நாய்கள் கொஞ்சம் ஓவர். சில நாட்களுக்கு முன்பு கூட யானைக்கல்லில் பழங்கள் வாங்க சென்ற உறவினரை நாய் கடித்து விட்டது. அவர்கள் என்னிடம் நாய்களை பிடிக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என கேள்வி எழுப்பினர். எனவே வெறி நாயோ, தெரு நாயோ…அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்.கமிஷனர் செபாஸ்டின்: தெரு நாய்களை பிடித்து அவைகளுக்கு ஊசி போட்டு மீண்டும் அதே இடத்தில் விட்டு விடுகிறோம். அவைகளை காட்டில் கொண்டு விடுவதாக வெளியான செய்தி தவறு. வெறி நாய்களாக இருந்தால் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.சுகாதார அலுவலர்: நகரில் 2 ஆயிரம் நாய்களுக்கு ஊசி மருந்து போடப்பட்டது.கணேசன்(தி.மு.க.,): பொதுப்படையாக இப்படி கூற கூடாது. எனது வார்டில் ஒரு தெரு நாயை கூட அதிகாரிகளோ, ஊழியர்களோ பிடிக்கவில்லை. எந்த வார்டில், எத்தனை நாய்கள், என்னென்ன தேதியில் பிடிக்கப்பட்டது என கூற முடியுமா?
கமிஷனர்: நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது