தினமணி 06.05.2010
மதுரையில் போலி தண்ணீர் பாக்கெட்டுகள்: காசு கொடுத்து நோயை வாங்கும் அவலம்
மதுரை,மே 5: கோடையில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் போலி தண்ணீர் பாக்கெட்டுகள், பாட்டில்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. சுகாதாரமற்ற முறையில் தண்ணீர் தயாரித்து விற்கப்படுவதால், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சுமார் 20 நிறுவனங்கள் ஐ.எஸ்.ஐ. அனுமதி பெற்று, கேன்கள் மற்றும் பாட்டில்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்து வருகின்றன. இதேபோல, மாவட்டப் பகுதிகளிலும் ஒரு சில நிறுவனங்கள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கேன்கள், பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்கின்றன.
தற்போது கோடைக்காலம் என்பதால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வீடுகள், அலுவலகங்கள், ஹோட்டல்களில் “மினரல் வாட்டர் கேன்கள்‘ விற்பனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சுமார் 40}க்கும் மேற்பட்ட இடங்களிலும், மாவட்டத்தில் 10}க்கும் மேற்பட்ட பகுதிகளிலும் பல போலி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த நிறுவனங்கள் சாதாரண ஹோட்டல்களில் குடிநீரை விற்பனை செய்து வருகின்றன.
மேலும் தண்ணீரை முறையாக சுத்திகரிப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட பெரிய ஹோட்டல், விடுதிகளில் பயன்படுத்தப்படும் மினரல் வாட்டர் கேன், பாட்டில்களை விலைக்கு வாங்கி, அதில் தண்ணீரை அடைத்து விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மதுரை நகரில் பெட்டிக் கடைகளில் தண்ணீர் பாக்கெட் ரூ. 2-க்கும், 1 லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில் ரூ.15-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பல்வேறு பெயர்களில் விற்பனையாகும் தண்ணீர் பாக்கெட்டுகளில் ஐ.எஸ்.ஐ. முத்திரை காணப்படுதில்லை. மேலும், பாக்கெட்டுகளில் ஒருவித துர்நாற்றம் வீசுவதாகவும் கூறப்படுகிறது.
மாட்டுத்தாவணி, திருமங்கலம், உசிலம்பட்டி பஸ் நிலையங்களில்இதுபோன்ற பாக்கெட்டுகள் அதிகம் விற்பனையாகின்றன. பஸ்கள் புறப்படும் நேரத்தில் பயணிகள் பஸ்ஸில் இருந்தவாறே அவசர அவசரமாக இந்த பாக்கெட்டுகளை வாங்குகின்றனர்.
அதேபோல, 25 லிட்டர் கொண்ட வாட்டர் கேன் ரூ. 25 முதல் ரூ. 30 வரை இடத்துக்கு தகுந்தவாறு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்ற கேன்களிலும் போலி நிறுவனங்கள் சுகாதாரமற்ற தண்ணீரை அடைத்துவிற்பனை செய்கின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் நிறுவனர் எம். சுப்புராம் கூறியதாவது:
பிரபல நிறுவனங்கள் உரிய முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அடைத்து பாட்டில்களிலும், கேன்களில் விற்பனை செய்வது ஒருபுறம் இருந்தாலும், மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சுமார் 40}க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் சுகாதாரமற்ற தண்ணீரை அடைத்து விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது.
குறிப்பாக கோச்சடை அருகே ஒரு போலி நிறுவனம் செயல்பட்டு வருவதாக வெளியான தகவலின்பேரில், கடந்த 10 தினங்களுக்கு முன் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டனர். சுகாதாரத் துறை அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டால் இதுபோன்ற நிறுவனங்களைக் கட்டுப்படுத்தலாம் என்றார். சுகாதாரமற்ற குடிநீர்தான் பல்வேறு நோய்களுக்கு காரணம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
“காசு கொடுத்து நோயை வாங்குவதுபோல’ போலி தண்ணீர் பாக்கெட்டுகளால் மக்கள் பாதிக்கப்படும் முன், சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.