தினமணி 04.07.2013
மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.
விருதுநகர் தனியார் அரங்கத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி புதன்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கை தொடங்கிவைத்து ஆட்சியர் ஹரிஹரன் பேசியதாவது: தற்போதைய சூழ்நிலையில் மழை நீர் சேகரிப்பு அவசியமான ஒன்றாகும். அதனால், இது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும்.
தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் மழை நீரை சேமிப்பது குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் இங்கு கருத்துரை வழங்கப்பட இருக்கிறது. இதை அனைவரும் அறிந்து கொண்டு, தங்கள் கிராமங்களிலும் செயல்படுத்த வேண்டும். இப்போதைய காலகட்டத்தில் நீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே சமயத்தில் நீர்நிலைகளில் நீரில் அளவு குறைந்து கொண்டே வருகிறது. எனவே நீர் ஆதரங்களில் நிலைத்தன்மையை உருவாக்குவதற்கு மழைநீர் சேகரிப்பு செயற்கை செறியூட்டும் கட்டமைப்பு ஏற்படுத்துவது அவசியமாகும்.
அதனால், குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் திறந்த வெளிக் கிணறுகள், ஆழ்துளைக்கிணறுகள் உள்ளிட்டவைகளின் அருகிலே மழை நீர் சேகரிப்பு அமைக்கும் திட்டம் 2001-ம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே முன்கூட்டியே அரசு அலுவலகங்கள், கண்மாய், குட்டைகள் உள்ளிட்டவைகளில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும்.
இதற்காகவே, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் புதிய வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டாயம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது என்று ஆட்சியர் டி.என்,ஹரிஹரன் கூறினார்.
முகாமில் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் புகழேந்தி வரவேற்புரை வழங்கினார். உதவி செயற்பொறியாளர் குணசேகரன் நன்றி கூறினார். இதில், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பீபீஜான். நிலநீர் ஆய்வாளர்கள் கணபதிசுப்பிரமணியன், பார்த்தீபன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.