தினகரன் 07.09.2010
மழைக்காலம் தொடங்குவதால் சாலைகளில் பள்ளம் தோண்ட தடை
சென்னை, செப். 7: மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் சென்னையில் சாலை மற்றும் குடிநீர், கழிவுநீர் பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் எதிர்வரும் வடக்கிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை ரிப்பன் கட்டிடத்தில் உள்ள பொன்விழா கூடத்தில் நடந்தது. மேயர் மா.சுப்பிரமணியன், ஆணையர் ராஜேஷ் லக்கானி, இணை ஆணையர் ஆசிஷ் சட்டர்ஜி, துணை ஆணையர் (சுகாதாரம்) ஜோதி நிர்மலா மற்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், பொதுப்பணித்துறை, டெலிபோன் துறை, மின்சார வாரியம், குடிநீர் மற்றும் கழிவுநீர் துறை, போலீஸ், தீயணைப்பு துறை, கடலோர காவல் படை, மருத்துவத்துறை, மாநகர போக்குவரத்துத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கலெக்டர் அலுவலகம் உட்பட 32 அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்கள் குறித்து மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
மாநகர எல்லைக்குள் ஏற்கனவே குடிநீர், கழிவுநீர், மின்சார வாரியம், சாலை போடுவதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அனைத்தும் செப்டம்பர் மாதம் 20ம் தேதிக்குள் மூட வேண்டும். புதிதாக சாலைகளில் எந்த பகுதியிலும் பள்ளம் தோண்டக் கூடாது. மழை காலங்களில் குடிநீரில் கழிவுநீர் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் டெப்போக்களில் அதிக தண்ணீர் தேங்குவதை தடுக்க தயார் நிலையில் மின் மோட்டார் வைத்துக்கொள்ள வேண்டும். தேவையான கட்டுமரங்கள், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த டாக்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.
சென்னையில் உள்ள 100க்கும் மேற்பட்ட குடிசை பகுதியில் அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து அக்டோபர் 15ம் தேதிக்குள் முழு சுகாதார பணிகளை செய்து முடிக்க வேண்டும். அடையார், கூவம் மற்றும் கால்வாய் பகுதிகள் உட்பட மழைநீர் வடிகால்வாய் பணிகள் அனைத்தும் அக்டோபர் 15க்குள் தூர்வாரப்பட்டு மழைநீர் தங்கு தடையின்றி வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ரமணன் தகவல் அக்டோபர் 20ம் தேதி மழை தொடங்கலாம்
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் பேசும்போது, “வழக்கமாக அக்டோபர் 20ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும். கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி துவங்கியது. இந்த காலங்களில் சென்னையில் வழக்கமாக 75 செ.மீ. மழை பெய்யும். 2009ம் ஆண்டு 80 செ.மீ. மழையும், 2008ம் ஆண்டு 90 செ.மீ. மழையும், 2007ம் ஆண்டு 60 செ.மீ. மழையும் பெய்தது. மழை பெய்வதற்கு 48 மணி நேரத்துக்கு முன் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மாநகராட்சி அதிகாரிகளுக்கு 5 நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்க இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும். புயல் சின்னம் குறித்தும் தகவல் பரிமாற்றம் செய்யப்படும். ஜூன் முதல் செப்டம்பர் வரை சென்னைக்கு 42 சதவீதம் அதிகமாக மழைநீர் கிடைத்துள்ளது” என்றார்.
ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்த அனைத்து துறை அலுவலர்கள் கூட்டத்தில் மேயர் மா.சுப்பிரமணியன் பேசுகிறார்.