தினமணி 07.01.2010
மழைநீரை தேக்க மாற்று திட்டம்
புதுச்சேரி, ஜன.6: புதுச்சேரியில் மழைநீரை தேக்குவதற்காக மாற்றுத் திட்டம் குறித்து ஆலோசித்து வருவதாக வேளாண் செயலர் டி.சி.சாஹூ தெரிவித்தார்.
புதுச்சேரி வேளாண்துறையின் நிலநீர் பிரிவின் சார்பில், தனியார் தொழிற்சாலை அலுவலர்களுக்கான மழை நீர் சேகரிப்பு, நீர்வளப் பாதுகாப்பு மற்றும் கழிவுநீர் மேலாண்மைப் பற்றிய கருத்தரங்கம் காமராசர் கல்வி வளாக கருத்தரங்க கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கை தொடங்கி வைத்து வேளாண் செயலர் டி.சி.சாஹூ பேசியது:
நீரை வீணடிப்பது காலையில் பல் துலக்குவதற்கு, குழாயை திருப்புவதில் இருந்து தொடங்குகிறது. இதனை தவிர்த்து போதுமான நீரைப் பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு சிக்கனமாகப் பயன்படுத்தினால், நாம் பயன்படுத்தும் நீரின் அளவு குறையும்.
இதனால் நாம் நிலத்தடி நீரை உறிஞ்சுவது குறைந்து நிலத்தடி நீர்வளம் பாதுகாக்கப்படும். தொழிற்சாலையிலிருந்து கழிவு நீரை வெளியேற்றினால் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகும். இக்கழிவு நீரை சுத்திகரித்து, கழிவறைகளிலாவது பயன்படுத்த முயற்சிக்கலாம் என்றார்.
÷வேளாண் இயக்குநர் சத்தியசீலன் பேசும்போது, “விவசாயம் செய்ய மிக முக்கிய தேவை நீர்வளம். நிகழ்ச்சி மற்றும் விருந்துகளில் குடிநீர் பாட்டில்களை வைப்பது தற்போது கெüரவமாகக் கருதப்படுகிறது.
மாநில பிரிவினை நடைபெறும்போது நீர் வளத்தை வைத்தே பிரிக்கப்படுகிறது. வள்ளுவனே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நீர் இன்றி அமையாது உலகு என்று கூறியிருக்கிறார்.இத்தகைய நீரை கிடைக்கும்போது சேமிக்க வேண்டும். சேமித்த நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்றார்.
கல்வித்துறையின் மாவட்ட பயிற்சி மைய சிறப்பு பணி அலுவலர் கிருஷ்ணன் பேசும்போது, “கிடைக்கின்ற நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது, மழை நீரை சேமிப்பது, கழிவு நீர் மேலாண்மை குறித்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்கெனவே விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தனியார் தொழிற்சாலை அலுவலர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி வரவேற்கத்தக்கது’ என்றார்.
மழைநீர் சேகரிப்பின் அவசியம், சேகரிப்பு முறைகள், நீர் பராமரிப்பு, நீர் வள பாதுகாப்பு, கழிவு நீர் மேலாண்மை குறித்த கருத்துகளை அதற்கான சிறப்பு வல்லுநர்களின் மூலமாக விளக்கப்பட்டன. தொழில் மற்றும் வர்த்தகத்துறை இயக்குநர் பன்னீர்செல்வம், நிலத்தடி நீர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் சுப்பிரமணியன்,வேளாண் பொறியியல் பிரிவின் கூடுதல் இயக்குநர் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.