மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு
மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நகராட்சி அலுவலர்களுக்கு பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மழைநீர் சேகரிப்பு குறித்து சென்னையில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் மழைநீரை சேமிப்பதன் அவசியம், மழைநீர் கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கட்டமைப்புகளை பராமரித்தல் குறித்து விளக்கப்பட்டது. தற்பொழுது தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், வடகிழக்கு பருவ மழையின் போது மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல் அவசியம் என்று இந்தப் பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது.
தனியார் கட்டடங்கள், அரசு கட்டடங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இதர கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இது தவிர, மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பொது மக்ககளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவற்கு துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள் வழங்குதல், மக்கள் கூடும் இடங்களில் ஃபிளக்ஸ் பேனர்கள் அமைத்தல், மழைநீர் சேமிப்பீர் மற்றும் மழைநீர் கட்டமைப்புகளை பராமரிப்பீர் ஆகிய வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் செங்கல்பட்டு, மதுரை, திருநெல்வேலி, திருப்பூர், தஞ்சாவூர், வேலூர், சேலம் ஆகிய நகராட்சி மண்டலங்கள் மற்றும் மாநகராட்சியை சார்ந்த ஆணையர்கள், பொறியாளர்கள் மற்றும் நகராட்சி ஆணையரக அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
இதில் நகராட்சி நிர்வாக இணை ஆணையர் அஜய் யாதவ், நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் ஜெயலட்சுமி, நகராட்சி நிர்வாக இணை இயக்குநர் செபாஸ்டின், தலைமை பொறியாளர் ஆர். வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.