தினமணி 21.06.2013
தினமணி 21.06.2013
மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி வீடுகள்தோறும் விழிப்புணர்வு பிரசாரம்
மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி வீடுகள்தோறும் வரும் திங்கள்கிழமைமுதல் (ஜூன் 24) விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.
சென்னையின் 200 வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் இந்த
விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக குடிநீர் வாரிய வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன. இப்பணிகளுக்காக குடிநீர் வாரியத்தைச் சேர்ந்த 2200
ஊழியர்கள் ஈடுபத்தப்பட உள்ளனர்.
மழைநீர் சேகரிப்பை அதிகரிக்கவும், அது குறித்து பொதுமக்களிடையே
விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நகராட்சி நிர்வாகத் துறையைச் சேர்ந்த
அதிகாரிகளுக்கு அண்மையில் பயிற்சியளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட
பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னையைப் பொருத்தவரை
குடிநீர் வாரியப் பகுதி பொறியாளர்கள் மேற்பார்வையில் மண்டலம்தோறும் வீடு
வீடாகச் சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.
அதன்படி, சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழை நீர்
சேகரிப்பு பிரசாரம் மேற்கொள்ளும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு
உள்ளது.
இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது:
வீடுகளில் உள்ள மழைநீர் தொட்டிகள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றை முறையாகப்
பராமரிப்பது குறித்து பொதுமக்களிடம் குடிநீர் வாரிய ஊழியர்கள் அறிவுறுத்த
உள்ளனர்.
மழைநீர் சேகரிப்பு குறித்த வரைபடங்கள் வீடுகள்தோறும் வழங்கப்படும்.
சென்னையின் அனைத்து பகுதிகளிலும் 2200 ஊழியர்கள் விழிப்புணர்வு பிரசாரப்
பணிகளில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.