தினமலர் 26.08.2010
மழைநீர் பாதிப்பு: உள்ளாட்சி அமைப்பு நடவடிக்கை
உள்ளகரம் : புறநகரில் மழைநீர் பாதிப்பு ஏற்படுத்தியுள்ள பகுதிகளில், அந்தந்த உள்ளாட்சி அமைப்பின் சார்பில் தற்காலிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை, புறநகர் பகுதியான உள்ளகரம்–புழுதிவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைக்காலத்தில் கடும் பாதிப்புகள் ஏற்படும். கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், இப்பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அந்த உள்ளாட்சி அமைப்பின் சார்பில் தற்காலிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உள்ளகரம்–புழுதிவாக்கம் நகராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதன் தலைவர் ஜெயச்சந்திரன், செயல்அலுவலர் கிரிஜா, துணைத் தலைவர் குமரமணிகண்டன் ஆகியோர் பார்வையிட்டனர். ராம்நகர், பாலாஜிநகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் இருந்து மழைநீர் பொக்லைனர் உதவியுடன் வெளியேற்றப்பட்டது.
பெருங்குடி அடுத்த கந்தன்சாவடி பகுதியில் திருவேங்கடம் நகர், அண்ணாநெடுஞ்சாலை, டெலிபோன்ஸ் நகர் உள்ளிட்ட பகுதியில் தேங்கியிருந்த மழைநீர் பேரூராட்சி தலைவர் கந்தன் மேற்பார்வையில் பொக்லைனர் உதவியுடன் அகற்றப்பட்டன. பள்ளிக்கரணை பேரூராட்சியில் காமகோடிநகர், காமாட்சிநகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தது. அவற்றை தலைவர் பஞ்சலிங்கம், துணைத் தலைவர் பாபு ஆகியோர் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.
மடிப்பாக்கம் பகுதியில் ராம்நகர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா அரிகிருஷ்ணன் தலைமையில், அப்பகுதியில் இருந்து மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அங்கிருந்து வெளியேறிய மழைநீர் ராம் நகர் ஏழாவது, எட்டாவது தெருக்களில் தஞ்சமடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இது குறித்து, ஊராட்சி மன்றத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.