தினகரன் 06.12.2010
மழைநீர் வடிகால் பணிக்கு பூமி பூஜை அமைச்சர் துவக்கி வைத்தார்
கோவை, டிச.6: கோவை மாநகரில் சாலையோர மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. இதை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
கோவை மாநகராட்சியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்கீழ் 72 வார்டு பகுதிகளில் சாலையோர மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு தொழில்நுட்ப கலந்தாலோசக நிறுவனத்தால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. மாநகரப் பகுதி 112 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மூன்று பகுதிகளாக செயல்படுத்தப்பட உள்ளது. சாலையோர மழைநீர் வடிகாலில் சேகரமாகும் மழைநீரால், வெள்ளப் பெருக்கு ஏற்படாத வகையில் மாநகர எல்லைக்கு உட்பட்ட 5 பிரதான இயற்கை வடிகால் மூலமாக 8 நீர்நிலைகளில் சேரும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் முதல் பகுதியான 31 மண்டலங்களில் சாலையோர மழைநீர் வடிகால் சுமார் 731 கி.மீ. நீளத்திற்கு ரூ.180 கோடி செலவில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் கடந்த 2009 ஆகஸ்ட் 28&ம் தேதி ஒப்புதல் அளித்தன. இம் மண்டலத்துக்கு உட்பட்ட 8 வார்டுகள் முழுமையாகவும், 42 வார்டுகளில் பகுதியாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இத் திட்டத்திற்கு கடந்த பிப்ரவரி 18&ம் தேதி தமிழக அரசிடம் நிர்வாக அனுமதி பெறப்பட்டது. பின்னர் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் 7 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. இப் பணிகளைச் செய்ய 3 தனியார் நிறுவனங்களுக்கு நவ.3&ம் தேதி உத்தரவிடப்பட்டது. 18 மாதங்களுக்குள் பணிகள் அனைத்தும் முடிந்துவிடும். மேற்படி பணிக்கான சர்வே முடிக்கப்பட்டு மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கோவில்மேடு (வார்டு 60) பகுதியில் உள்ள இயற்கை வடிகால் சேரும் இடத்தில் இருந்து பணிகளை மேற்கொள்ள நேற்று பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் துவங்கின.
இதைத் தொடர்ந்து கணபதி, மணியகாரம்பாளையம் பகுதிகளில் பூமி பூஜை பணிகளை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி துவக்கி வைத்தார். மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக், பணிக்குழுத் தலைவர் ராமசாமி, கவுன்சிலர்கள் சுமதி காயத்ரி, சாந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சி 60வது வார்டில் ரூ.18.16 கோடியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சர் பொங்கலுர் பழனிச்சாமி நேற்று துவக்கிவைத்தார். அருகில் மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக், ஆணையாளர் அன்சுல் மிஸ்ரா, பணிக்குழு தலைவர் ராமசாமி, கவுன்சிலர்கள் சாந்தாமணி ஆறுமுகம், காயத்ரி.