தினமலர் 13.11.2013

சென்னை : சென்னை
மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ள, மழைநீர் வடிகால்வாய்களில்,
இதுவரை, ஒரு லட்சம் இடங்களில், முறைகேடாக கழிவுநீர் இணைப்பு இருப்பது
கண்டறியப்பட்டு உள்ளது. இன்னும் முழு கணக்கெடுப்பு முடியாத நிலையில், இந்த
இணைப்புகளை துண்டித்து, மழைநீர் வடிகால்வாய்களை மீட்பது எப்படி என, வழி தெரியாமல்,
மாநகராட்சி திணறி வருகிறது. சென்னை
மாநகராட்சி பராமரிப்பில், 1,912 கி.மீ., துாரத்திற்கு, மழைநீர்
வடிகால்வாய்கள் உள்ளன. மழைநீர் வெளியேறுவதற்காக கட்டப்பட்ட இந்த
வடிகால்வாய்களில், தற்போது, கழிவுநீர் மட்டுமே பிரதானமாக செல்கிறது.
இதனால், வடிகால்வாய்களில் அடைப்பு, கொசு உற்பத்தி, சுகாதார சீர்கேடு,
நீர்வழித்தடங்கள் மாசடைவது என, பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த
மே மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், இந்த விவகாரம் குறித்து
விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய மேயர் சைதை துரைசாமி, ”மழைநீர்
வடிகால்வாய்களில் முறைகேடாக கழிவுநீர் இணைப்பு கொடுத்துள்ள வர்த்தக
நிறுவனங்களின் தொழில் உரிமம் ரத்து செய்யப்படும்.
கிரிமினல் நடவடிக்கை
எடுக்கப்படும்,” என்றார். எப்படி துண்டிப்பது? இதை தொடர்ந்து, 15
மண்டலங்களிலும் உள்ள முறைகேடு இணைப்புகள் குறித்து கணக்கெடுக்க
உத்தரவிடப்பட்டது. மாநகராட்சி
சுகாதார துறை ஊழியர்கள் மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், வர்த்தகம்,
குடியிருப்புகள் என, இதுவரை, சென்னையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான
முறைகேடு கழிவுநீர் இணைப்புகள், மழைநீர் வடிகால்வாயுடன் இணைக்கப்பட்டு
இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இன்னும் முழுமையாக கணக்கெடுப்பு
முடியாத நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு
எண்ணிக்கையிலான முறைகேடு இணைப்புகளை எப்படி துண்டிப்பது, எவ்வாறு
முறைப்படுத்துவது என, வழி தெரியாமல், மாநகராட்சி விழிபிதுங்கி நிற்கிறது.
இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை
குடிநீர் வாரியம், மாநகராட்சியில் சுகாதார துறை, பொறியியல் துறை என,
மூன்று பிரிவாக, முறைகேடு இணைப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
மழைநீர்
வடிகால்வாயில் மருந்து தெளிக்கும் ஊழியர்கள் மூலம், சேகரிக்கப்பட்ட
விவரங்களில், அனைத்து மண்டலங்களிலும் சேர்த்து, ஒரு லட்சத்திற்கும்
மேற்பட்ட, கழிவுநீர் இணைப்புகள், மழைநீர் வடிகால்வாயில் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அரசு அனுமதிக்கு…ஆள்நுழைவு குழி மூலம்
மட்டுமே, அனைத்து இணைப்புகளையும் கண்டறிய முடியாது. இதனால், குடிநீர்
வாரியம், மாநகராட்சி பொறியியல் பிரிவு ஊழியர்கள், தனி கணக்கெடுப்பு நடத்தி
வருகின்றனர். முழுமையாக கணக்கெடுப்பு முடிந்த பின், இந்த விஷயத்தில்
எடுக்கப்பட வேண்டிய மேல் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.
முறைகேடு
கழிவுநீர் இணைப்புகளை தடுக்க, வர்த்தக நிறுவனங்களாக
இருந்தால், தொழில் உரிமம் ரத்து, அபராதமும், குடியிருப்புகளாக இருந்தால்,
அபராதமும் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அரசின் அனுமதி
கோரப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
‘துண்டிப்போம்’ குடிநீர்
வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மழைநீர் வடிகால்வாய் மாநகராட்சியின்
சொத்து. அதில் முறைகேடு இணைப்புகள் இருந்தால், மாநகராட்சி அதிகாரிகளே
துண்டிப்பு செய்யலாம். எங்களுக்கு தெரியப்படுத்தினாலும், இணைப்பை
துண்டிப்போம்’ என்றார்.
1,323 இணைப்பு விரைவில் துண்டிப்பு!சென்னை
மாநகராட்சிக்கு உட்பட்ட, பழைய மண்டலங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில்,
வணிக வளாகங்கள், கடைகள், ஓட்டல்கள் என, வர்த்தக நிறுவனங்களில் மட்டும், 1,323 கழிவு நீர் இணைப்புகள் இருப்பது கண்டறிப்பட்டு
உள்ளது. இவற்றுக்கு, மாநகராட்சி, ஏற்கனவே நோட்டீஸ் வழங்கியுள்ள நிலையில்,
விரைவில், இணைப்புகளை துண்டிக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளன.
மண்டல வாரியாக விவரம்:
தேனாம்பேட்டை 320
திரு.வி.க., நகர் 306
ராயபுரம் 245
அடையாறு 169
தண்டையார்பேட்டை 168
அண்ணா நகர் 60
கோடம்பாக்கம் 55