தினமலர் 16.12.2013
மழைநீர் வடிகால்வாய்களை தூர்வார புதிய இயந்திரம் சோதனை முறையில் பயன்படுத்த மாநகராட்சி திட்டம்
சென்னை: மனிதர்களால் மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரப்படுவதை தவிர்க்கும் வகையில், அந்த பணிகளை சோதனை முறையில் புதிய இயந்திரங்களை கொண்டு மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
விஷவாயு அபாயம்சென்னை மாநகராட்சியில், 2,000 கி.மீ., தூரத்திற்கு மழைநீர் வடிகால்வாய்கள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்ய, ஆள் நுழைவு குழிகள் வழியாக மனிதர்கள் இறங்கி, சுத்தம் செய்யும் நிலை தற்போது உள்ளது.வெள்ளபாதிப்பை தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு முதல், மழைநீர் வடிகால்வாய்கள், ஆண்டிற்கு இரண்டு முறை தூர்வாரப்படுகின்றன.
அந்த பணிகள், சுகாதார பணியாளர்கள் மூலம் செய்யப்படுகின்றன.தற்போது, சென்னையில் மழைநீர் வடிகால்வாய்களில், கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில், மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் போது, விஷவாயு தாக்கி இறக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.இதை தவிர்க்கும் வகையில், இனி, மழைநீர் வடிகால்வாய்களை, இயந்திரங்களை கொண்டு தூர்வார மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இதற்காக, சோதனை முறையில், ‘ஸ்லட்ஜ்டு பம்ப்’ என்ற புதிய இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டு, மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.தற்போது, இரண்டு இயந்திரங்கள் மட்டுமே வாங்கப்பட்டு உள்ளன. ஒரு இயந்திரத்தின் விலை, 10 லட்சம் ரூபாய்.வெற்றிகரமாக இயந்திரம் செயல்படும் பட்சத்தில், வார்டுக்கு ஒரு இயந்திரம் வாங்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அனைத்து வார்டுகளும்இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:புதிய இயந்திரம் சோதனை முறையில் இயக்கப்படுகிறது. இது சாத்தியப்படாத பட்சத்தில், வேறு இயந்திரங்கள் பரீட்சார்த்த முறையில் இயக்கப்படும்.
நீடித்து உழைக்கவும், மழைநீர் வடிகால்வாய்களை எளிதில் சுத்தம் செய்யவும் ஏற்ற இயந்திரம் கண்டறியப்பட்டு, அனைத்து வார்டுகளுக்கும் வாங்கி தரப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.