தினத்தந்தி 14.06.2013
மாங்காடில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு பேரூராட்சி அதிகாரி தகவல்
மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம்
குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணிக்கு பேரூராட்சி தலைவர்
சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் 100–க்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று
பேரூராட்சி அலுவலகத்தை அடைந்தனர். அப்போது மழைநீர் சேகரிப்பு திட்டம்
குறித்து கோஷங்கள் எழுப்பியதுடன், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு
பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்கள்.
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரி வெங்கடேசன் கூறும்போது, ‘‘மாங்காடு
பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் கட்டிடங்களில்
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி இல்லாவிட்டால் பேரூராட்சி மூலம்
வழங்கப்படும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும். வருகிற 20–ந்
தேதிக்குள் மழைநீர் கட்டமைப்பு ஏற்படுத்தாத கட்டிடங்களில் பேரூராட்சி
சார்பில் கட்டமைப்பு வசதி செய்து முடிக்கப்பட்டு அதற்கான தொகையை அவர்களிடம்
இருந்து வசூலிக்கப்படும்’’ என்றார்.
பேரணியில் பேரூராட்சி துணைத்தலைவர் முருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.