தினமணி 24.09.2010
மாநகராட்சி ஆணையரிடம் ஊழியர்கள் மனு
மதுரை, செப்.23: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகராட்சி ஊழியர்கள் ஏராளமாக திரண்டு ஆணையர் எஸ். செபாஸ்டினிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
மதுரை மாநகராட்சி எழுத்தர் சங்கத் தலைவர் முகமது ரபீக், தமிழ்நாடு மாநகராட்சிப் பணியாளர் சங்கத் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான பணியாளர்கள் திரண்டு, மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், மதுரை மாநகராட்சியில் காலியாக உள்ள 65 சதம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியாளர் பதவி உயர்வுப் பட்டியலை விரைவில் வெளியிடவேண்டும். மாநகராட்சி பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணியிடம் வழங்கவேண்டும்.
தேர்தல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் மாநகராட்சிப் பணியாளர்களை ஈடுபடுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆணையர் எஸ். செபாஸ்டின் விரைவில் கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.