தினமணி 17.04.2010
மாநகராட்சி ஆணையருக்கு சிறந்த நிர்வாகத்துக்கான விருது
சென்னை, ஏப். 16: சிறந்த நிர்வாகத்துக்கான பிரதமர் விருதுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2008-09-ம் ஆண்டின் சிறந்த நிர்வாகத்துக்கான பிரதமர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகள் தனிநபர், குழு மற்றும் நிறுவனப் பிரிவுகளின்கீழ் அளிக்கப்படுகின்றன. அறிவிக்கப்பட்டுள்ள 9 விருதுகளில், தனிநபர் பிரிவில் 5 விருதுகளும், குழு பிரிவில் 3 விருதுகளும், நிறுவனப் பிரிவில் ஒரு விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. கர்ப்பப் பை வாய்புற்றுநோய் சோதனைக்கு புதிய முறையை பயன்படுத்தும் சென்னை மாநகராட்சியின் உயிர் காக்கும் திட்டத்துக்காக தனிநபர் பிரிவின்கீழ், மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானிக்கு விருது வழங்கப்படுகிறது.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு ஏப்ரல் 21}ம் தேதி குடிமை சேவைகள் தினத்தன்று விருதுகள் வழங்கப்பட உள்ளன.