தினமலர் 19.01.2010
மாநகராட்சி இடத்தில் டாஸ்மாக் ‘பார்‘: கலெக்டர், கமிஷனருக்கு நோட்டீஸ்
மதுரை:மதுரை அண்ணாநகரில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து டாஸ்மாக் “பார்‘ நடத்துவதற்கு தடை விதிக்க கோரிய மனு குறித்து கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் தாக்கல் செய்த பொது நல வழக்கு:மாநகராட்சி எட்டாவது வார்டு குருவிக்காரன் சாலையில் 25 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்திற்கு கீழ் கழிவு நீர் கால்வாய் உள்ளது.
இந்த இடத்தை மக்கள் குப்பை கொட்டுமிடமாக பயன்படுத்தினர். மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் உதவியுடன், சிலர் அந்த இடத்தை ஆக்கிரமித்து, தற்போது டாஸ்மாக் “பார்‘ நடத்துகின்றனர். கட்டடமும் கட்டப்பட்டுள்ளது. அங்கு ஒரு பகுதியில் லாரிகளை நிறுத்தியும், மணல், செங்கல், ஜல்லிகற்களை கொட்டியும் வைத்துள்ளனர். அந்த இடம் குறித்து ராஜேந்திரன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டார். அதற்கு, “அந்த இடம் மாநகராட்சி கமிஷனர் பெயரில் இருப்பதாக,’ தெரிவிக்கப்பட்டது. அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி தலைமை செயலாளர், கலெக்டர், கமிஷனருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.
மனு, நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், ராஜேந்திரன் கொண்ட பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் சாமி, ராஜாராமன் ஆஜராயினர். அரசு இடத்தில் ஆக்கிரமிப்பு இருப்பது குறித்து, அரசு வக்கீலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பிறகு “”மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமை செயலாளர், கலெக்டர், கமிஷனர், டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி,” நீதிபதிகள் உத்தரவிட்டனர