தினமலர் 29.06.2011
மாநகராட்சி ஊழியரின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் அமலாகிறது பழைய பணி விதிகள்
மாநகராட்சியின் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, ஏற்கனவே நடைமுறையில் இருந்த பணி விதிகள், மீண்டும் அமலுக்கு வருகிறது. இதற்கான தீர்மானம் இன்று நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்படுகிறது. சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று நடக்கிறது. இக்கூட்டத்தில் ஊழியர்களுக்கான விதிமுறைகள், கான்கிரீட் வீடு திட்ட பயனாளி தேர்வு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. மாநகராட்சி ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதலுக்கு புதிய விதிகள் அமல் செய்யப்பட்டன. இதன்படி, ஒரு துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர், பதவி உயர்வு பெற்று வேறு துறைக்கு மாற்றப்பட்டார். இதற்கு, ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
வருவாய் பிரிவில் பணியாற்றியவரை, சுகாதாரத்துறைக்கு மாற்றுவதால் பெரும் குழப்பங்கள் ஏற்படுகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. ஊழியர்களின் வேண்டுகோளை ஏற்று, ஏற்கனவே இருந்த பணி விதிகளை அமல் செய்ய முடிவு செய்து, அதற்கான தீர்மானம், இன்றைய மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வரப்படுகிறது. சென்னை மாநகராட்சி உள்ள ரிப்பன் பில்டிங் மற்றும் விக்டோரியா ஹால் ஆகியவற்றின் நுழைவாயிலில், பூமிக்கடியில் மெட்ரோ பாதை செல்வதால், அங்குள்ள ரிப்பன் பிரபு, சென்னை முன்னாள் மேயர்கள் சத்தியமூர்த்தி, தியாகராயர் ஆகியோர் சிலைகளை அப்புறப்படுத்தி, மீண்டும் அதே இடத்தில் அமைக்கவும் இன்றைய மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் உள்ள குடிசை வீடுகளை, கான்கிரீட் வீடுகளாக மாற்ற, ஜவகர்லால் நேரு நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தில், ஒரு வீட்டுக்கு 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், தேர்வு செய்யப்பட்டு பங்குத் தொகையை செலுத்த முடியாத பயனாளிகளுக்கு பதிலாக, புதிய பயனாளிகளை தேர்வு செய்தல் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களில் மாநகராட்சி கூட்டம் முடிவுகளை மேற்கொள்கிறது.