தினமணி 10.02.2010
மாநகராட்சி கலந்துரையாடல் கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்
மதுரை, பிப்.9: மதுரை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நுகர்வோர் அமைப்பு, மகளிர் சங்கத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்தின்போது பழங்காநத்தம் முதல் பாத்திமா கல்லூரி வரையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்திற்கு மாநகராட்சி துணை ஆணையர் சு.சிவராசு தலைமை வகித்தார்.
உதவி ஆணையர் (வருவாய்) ரா.பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தின்போது, பழங்காநத்தம் முதல் பாத்திமா கல்லூரி வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கொசு ஒழிப்பு நடவடிக்கை, பழுதடைந்த முக்கிய பகுதி சாலைகளைச் செப்பனிடுதல். தெருக்களில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுதல், குடிநீர் விநியோகம் இல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்தல்.
தெருக்களில் திரியும் நாய்களைப் பிடித்தல், பள்ளிகளின் முன்பாக விற்கப்படும் ஈ மொய்க்கும் தின்பண்டங்கள் விற்பதைத் தடை செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இக்கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை ஆணையர் சிவராசு தெரிவித்தார்.
கூட்டத்தில் கூடல்நகர் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.