தினமலர் 22.09.2010
மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் போஸ்டர் போலீசில் புகார் செய்ய கமிஷனர் உத்தரவு
திருநெல்வேலி : மாநகராட்சி குப்பைத் தொட்டியில் போஸ்டர் ஒட்டினால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் சுப்பையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நெல்லை மாநகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த 4.5 மெட்ரிக் டன் கொள்ளவு உள்ள மஞ்சள் நிற குப்பைத் தொட்டிகளும், 1.1 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட பச்சை நிற குப்பைத் தொட்டிகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிகளின் மீது நோட்டீஸ், வால் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் அவை என்ன பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தெரியாமல் போவதால் பொதுமக்கள் குப்பைத் தொட்டி தவிர்த்து பிற இடங்களில் குப்பை கொட்டும் நிலை உருவாகிறது. எனவே மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் மீது விளம்பர போஸ்டர்கள் ஒட்டுவோர் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவனந்தபுரம் ரோட்டிலுள்ள ஒரு குப்பைத் தொட்டியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. சுவரொட்டிகள் ஒட்டியவர் மீது சுகாதார ஆய்வாளர் சாகுல்ஹமீது பாளை., போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.மேலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகள் மீது போஸ்டர் ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் சுப்பையன் எச்சரித்துள்ளார்.