மாநகராட்சி தனி குடிநீர் திட்டப்பணி மத்திய அமைச்சருடன் மேயர் கமிஷனர் இன்று சந்திப்பு
சேலம்: சேலம் மாநகராட்சி தனி குடிநீர் திட்டப்பணி தொடர்பாக டெல்லியில் இன்று மத்திய அமைச்சரை மேயர், கமிஷனர் ஆகியோர் சந்தித்து பேசுகின்றனர்.
சேலம் மாநகராட்சிக்கு தனி குடிநீர் திட்டப்பணிகள் ரூ.320 கோடியில் நடந்து வருகிறது. மேட்டூரில் இருந்து சேலத்திற்கு வரும் வழியில் குரங்குச்சாவடியில் சேலம் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே குழாய் பதிக்க இன்னும் அனுமதி கிடைக்காததால் பணிகள் தாமதமாகியுள்ளது.
இந்நிலையில் பணிகளை விரைந்து முடிக்க டெல்லிக்கு சேலம் மேயர் சவுண்டப்பன் தலைமையில் குழுவினர் சென்றனர். நேற்று அங்கு டெல்லியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் அதிகாரிகளை சந்தித்து குடிநீர் குழாய் பதிக்க அனுமதி கேட்டு மனு கொடுத்தனர். அதில், குரங்குச்சாவடியில் சேலம் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 2.19 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் பதிக்க அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளனர். இன்று (19ம் தேதி) அந்த குழுவினர் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை சந்தித்து பேசுகின்றனர்.